பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி, கருவையும் கலைத்த வாலிபர் கைது
சென்னை,
சென்னையில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி, பின்பு கருவையும் கலைத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராதா (வயது 14-பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதி பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ராதா காதல் வலையில் சிக்கினார். அதே பகுதியில் வசிக்கும் அருண் (22) என்ற வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்.
அருண் சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலை பகுதியைச் சேர்ந்தவர். மதுரவாயல் அருகே உள்ள வானகரம் மீன் மார்க்கெட்டில், மீன் கடை ஒன்றில் அருண் வேலை செய்து வந்தார். அருணும், ராதாவும் நெருக்கமாக பழகி வந்தனர். திருமண ஆசை காட்டி ராதாவிடம், அருண் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
அதன் விளைவாக ராதா கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்து அருண் அதிர்ச்சியடைந்தார். கருவை கலைக்கச் சொல்லி ராதாவிடம் வற்புறுத்தினார். ராதா மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் ராதாவின் வயிற்றில் அருண் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. அதில் ராதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
ராதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ராதாவின் தாயார் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ் (சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) அருண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருண் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Comments
Post a Comment