போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க சென்னை மெரினாவில் போலீஸார் அதிகளவில் குவிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்க ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து மெரினாவில் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அண்ணா சதுக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை ஆங்காங்கே 50, 100 என்று ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடற்கரைச் சாலைக்குச் செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸாரின் கெடுபிடியால் மெரினா சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போரட்டத்தில் ஈடுபட யார் எந்த வழியாக வந்தாலும் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் எந்த பகுதியில் போராட்டம் நடந்தாலும் அதனை முறையாகச் கையாள வேண்டும் என்றும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெரினாவைப் போல் பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரை, பாலவாக்கம் அந்தோணியார் கடற்கரையிலும் கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.



Comments
Post a Comment