மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி ஒருபோதும் கூறவில்லை: பாஜக எம்.பி. பேச்சு
மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் மோடி ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என்று பாஜக எம்.பி. அமர் சாப்லே தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவேன், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் விமர்சனமும், கிண்டலும் செய்து வருகின்றன.
இந்நிலையில், இப்போது பிரதமர் மோடி, மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று கூறவில்லை என பாஜக எம்.பி. பேசியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி அரசின் சாதனைகள், திட்டங்கள், நலஉதவிகள் குறித்து பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி புனே அருகே பிம்ப்ரி நகரில் பாஜக மாநிலங்களவை எம்.பி. அமர் சாப்லே மோடி அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ''பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன் கறுப்புப் பணத்தை மீட்டால் மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று ஒருபோதும் கூறவில்லை. பிரதமர் மோடி பேசியது தவறாக எதிர்க்கட்சிகளால் அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது
மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்பேன் என்று மட்டுமே பிரதமர் மோடி கூறியிருந்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று நாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது, பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததாக எப்படிக் கூற முடியும். அவ்வாறு பிரதமர் மோடி ஒருபோதும் மக்களிடம் வாக்குறுதி அளிக்கவும் இல்லை, பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இல்லை'' என அமர் சாப்லே தெரிவித்தார்.




Comments
Post a Comment