கேமராவை பறித்து பதிவுகளை அழித்த கலவரக்காரர்கள்: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; 4 பேர் காயம், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில் ‘தி இந்து’ புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். 4 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த போராட்டத்தை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வந்த அரசு வாகனத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி, கட்டையால் அடித்து சேதப்படுத்தினர். அப்போது, அங்கு நின்ற பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் இச்சம்பவத்தை படம்பிடிக்க முயன்றனர். உடனே, வன்முறையில் ஈடுபட்ட சிலர், இதை யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது எனக் கூறி பத்திரிக்கையாளர்கள் மீது கற்களை வீசி தாக்கினர்.

கேமராவை உடைத்தனர்

மேலும், கேமராக்களை வலுக்கட்டாயமாக பறித்து, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை அழித்தனர். பாலமுருகன் என்ற ஃப்ரீலேன்ஸ் புகைப்படக் கலைஞரின் கேமராவை பறித்து, கீழே ஓங்கி எறிந்தனர். இதில் கேமரா சேதமடைந்தது. இதுபோல் ‘தி இந்து’ புகைப்படக் கலைஞர் என்.ராஜேஷை தாக்கிய கும்பல், அவரிடம் இருந்து கேமராவை பறித்து படங்களை, அழித்து விட்டு திருப்பிக் கொடுத்தது. மேலும், போராட்டக்காரர்கள் தாக்கியதில் நெல்லையை சேர்ந்த ஜெயா டிவி செய்தியாளர் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் மாணிக்கம், தூத்துக்குடியை சேர்ந்த தினகரன் நாளிதழ் புகைப்படக் கலைஞர் பெலிக்ஸ் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
பத்திரிகையாளர்களுக்கு சொந்தமான 4 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டன. ஆன்லைன் செய்தி நிறுவன செய்தியாளர் சண்முகவேலின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதவிர, மேலும் 3 செய்தியாளர்களின் மோட்டார் சைக்கிள்கள் கற்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.

Comments