தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சென்னையில் போராட்டத்தில் இறங்கிய ஐடி பணியாளர்கள்!

சென்னை: தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து சென்னை காஞ்சிபுரம் எல்லையில் இருக்கும், மஹிந்திரா சிட்டியில் உள்ள ஐடி பணியாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க இதற்கு எதிராக போராடி வரும் நிலையில் தற்போது ஐடி பணியாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

மஹிந்திரா

சென்னை காஞ்சிபுரம் எல்லையில் இருக்கும், மஹிந்திரா சிட்டியில் நிறைய ஐடி கம்பெனிகள் உள்ளது. இதில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள்தான் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இன்று காலையிலேயே அலுவலகம் வந்தவுடன் எல்லா பணியாளர்களும் சேர்ந்து சாலையில் இறங்கி போராடி இருக்கிறார்கள். எல்லா நிறுவனத்திலும் உள்ள நிறைய பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கருப்பு

இந்த போராட்டம் நடத்திய பணியாளர்கள் எல்லோரும் கருப்பு உடை அணிந்து வந்தனர். அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகம் அடங்கிய போர்டுகளை சுமந்து போராட்டம் நடத்தினர். முக்கியமான ஸ்டெர்லைட் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளையும், அதற்கான விழிப்புணர்வையும் அந்த போர்டுகளில் எழுதி இருந்தனர்.

பாதிப்பு இல்லாமல்

முக்கியமாக காலை நேரத்தில் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்திற்கு பாதிப்பு இருக்க கூடாது என்பதற்காக சாலை ஓரத்தில் போராட்டம் நடத்தினார்கள். மனித சங்கிலி போல வரிசையாக நின்று போராட்டம் நடத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது கூச்சலிட்டார்கள்.

அழைப்பு விடுத்துள்ளனர்

மிக முக்கியமாக இவர்கள் மற்ற ஐடி பணியாளர்களையும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட அழைப்பு விடுத்துள்ளனர். சென்னையில் மற்ற மாநிலங்களில் உள்ள ஐடி பணியாளர்கள் இதே போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் எல்லோரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments