‘மோடி இந்தியாவின் பிரதமர் தான்: ஆனால்...’ ஸ்டாலின் விமர்சனம்
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் வார்த்தை கூட சொல்லாதது வெட்கக்கேடானது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
பாஜக ஆட்சியின் நான்காண்டுளில் பல சாதனைகளை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறாரே?
நான்காண்டு சாதனை என்று எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு இந்தியாவுக்குள் தான் இருக்கிறது. இந்தியாவின் பிரதமர் தான் மோடி. ஆனால், ஒருவேளை ஏதேனும் வெளிநாட்டுக்கு அவர் பிரதமராக இருக்கிறாரோ இன்றைக்கு எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
காரணம், இந்தியாவில் இருக்கின்ற தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏறக்குறைய 13 பேர் இறந்திருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 பேர் வரை படுகாயம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நியாயமாக, பிரதமர் மோடி அவர்களே நேரில் வந்திருக்க வேண்டும் அல்லது மத்திய அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதுவுமில்லை என்ற நிலையில், ஒரு பிரதமர் அந்த மக்களுக்கு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை என்பதுதான் வெட்கக்கேடானது, வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
நீதிமன்றம் உத்திரவிட்டும் 3 மாவட்டங்களில் இணையதளங்கள் தடைசெய்யப்பட்டு இருப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்களே?
இந்த ஆட்சி செயல்படவே இல்லை என்பதை நான் ஒரே வரியில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். செயல்படக்கூடிய அரசாக இருந்தால் இதுபற்றி எல்லாம் நியாயம் கேட்கலாம். ஆனால், இப்போது கேட்டும் பயனில்லை.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பல நாட்கள் கடந்த பிறகு, துணை முதலமைச்சர் வருவதாக இப்போது செய்திகள் வருகிறதே?
தென்பகுதியில் இருக்கக்கூடிய, அதுவும் ஏற்கெனவே முதலமைச்சராக இருந்த, இப்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வமாவது வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரைக்கும் அவர் வரவில்லை. நாளை அவர் வருவதாக வந்திருக்கும் செய்தி உண்மையா, பொய்யா என்பது எனக்கு தெரியவில்லை. அவர் வந்தாலும், அதுவும் ஒரு நாடகமாகவே இருக்கும்.
காரணம், நாளை மறுநாள் சட்டமன்றம் கூடவிருக்கிறது. அப்போது நாங்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பி, ஏதேனும் கேள்விகள் கேட்கிறபோது, எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார், என்று சொல்வதுபோல, நானும் போய்விட்டு வந்தேன் என்று சொல்வதற்காக, ஒரு கபட நாடகத்தை நடத்தும் முயற்சி இது என்று நான் கருதுகிறேன்’’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



Comments
Post a Comment