தமிழகம் வந்தால் தோசை சுட்டுக் கொடுப்பீர்களா?- பிரதமர் மோடி நகைச்சுவை
உஜ்வாலா யோஜனா திட்டம் குறித்து பெண்களிடம் கலந்துரையாடல் நடத்திய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் தோசை சுட்டுக் கொடுப்பீர்களா என்று கேட்டு நகைச்சுவை செய்தார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பெண்கள் சிலருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் இன்று கலந்துரையாடினார்.
அப்போது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் மோடி உரையாடினார். பெண்களிடம் பேசிய மோடி, சிலிண்டர் காலியானால், உரிய நேரத்தில் நிரப்பி மாற்றிக் கொடுக்கப்படுகிறதா எனக் கேட்டார், ஏதேனும் இடைத் தரகர்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற கையூட்டு கேட்கிறார்களா எனவும் கேட்டார்.
அதுமட்டுமல்லால், எல்பிஜி எரிவாயு அடுப்பு மூலம் சமையல் செய்யும் போது ஏற்பட்ட அனுபவம், நேரத்தை எவ்வாறு அது மிச்சப்படுத்துகிறது? எனக் கேட்டார்.
மேலும், சில பெண்கள் எல்பிஜி அடுப்பு மூலம் சிற்றுண்டி உணவகங்கள் நடத்துகிறார்கள், அது குறித்தும் மோடி கேட்டுத் தெரிந்து கொண்டு, குடும்பத்துக்கு தேவையான நிதியை இந்த அடுப்பு மூலம ஈட்ட முடிகிறதா? எனவும் கேட்டார்.
மேலும், குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் புட் உணவுகளை வாங்கிக்கொடுக்காமல், அவர்களுக்கு இந்த அடுப்புகள் மூலம் ஆரோக்கியமான,சத்தான உணவுகளைச் செய்து தரும்படி அறிவுறுத்தினார்.
இதில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரம்மா என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசிய மோடி, தமிழகத்தில் உங்கள் ஊருக்கு வந்தால், எனக்கு நீங்கள் தோசை சுட்டுக் கொடுப்பீர்களா? என இந்தியில் நகைச்சுவையாகக் கேட்டார். அது ருத்ரம்மாவுக்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ருத்ரம்மா, கண்டிப்பாக, உங்களுக்குத் தோசை சுட்டுக்கொடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
அப்போது பிரதமர் மோடி பிரபலமான பிரேம்சந்த் குறித்த ஒரு கதை சொல்லி அனைவரையும் நெகிழ வைத்தார். ஹமீது என்ற முஸ்லிம் சிறுவன் இத்கா பண்டிகைக்கு ஏன் இனிப்புகளையும், பரிசுகளையும் வாங்கி வரவில்லை என அவனிடம் கேட்கப்பட்டோது, நான் இனிப்புகளையும், பரிசுகளையும் வாங்குவதற்குப் பதிலாக என் பாட்டிக்கு சமையல் செய்யும்போது கையை சுட்டுக்கொள்ளாமல் இருக்க ஒரு இடுக்கி வாங்கிக் கொடுத்தேன் என்று அந்தச்சிறுவன் கூறியது பெண்கள் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட இடர்களைச் சந்திக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது என்று மோடி குறிப்பிட்டார்.



Comments
Post a Comment