தூத்துக்குடிக்கு துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை பயணம்
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்தன. இதனால் அ. குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆலை எதிர்ப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியானது வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்ற நிலை நீடித்து வந்தது. இதனால் பதற்றத்தினை தணிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்தது.
இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பேருந்துகள் ஓட தொடங்கியுள்ளன. இயல்பு நிலை திரும்பியதனால் அங்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்ததனை அடுத்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார். இன்றிரவு மதுரை செல்லும் அவர் கோவில்பட்டியில் தங்குகிறார்
அதன்பின்னர் அவர் தூத்துக்குடிக்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை சந்திக்க இருக்கிறார்.



Comments
Post a Comment