ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்பட்டு உள்ளது: மாவட்ட ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயக்க அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார். முதல்வர் உத்தரவுப்படி ஆலைக்கான மின்சாரம் , குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் காயமடைந்தவர்களில் 90 % பேர் அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தற்போது தூத்துக்குடி நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். பெட்ரோல் பங்க், வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபட்டதாக 145 பேர் கைது செய்யப்பட்டதாக எஸ்பி முரளி ரம்பா கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் கருத்து குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது ஆலை இயங்கவில்லை என்பது உறுதி என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Comments