‘அரசு பங்களா அல்ல; கன்ஷிராம் நினைவகம்’-யோகிக்கு மாயாவதி அதிரடி கடிதம்
உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதி தன் அரசு பங்களா காலி செய்யும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தம் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட கன்ஷிராம் நினைவகத்தில் தாம் தங்கியிருந்ததாக யோகி ஆதித்யநாத்திற்கு மாயாவதி கடிதம் அளித்துள்ளார்.
உபியின் முன்னாள் முதல்வர்கள் ஆறு பேர் தங்கியுள்ள அரசு பங்களாக்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ல் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து உபி அரசு சார்பில் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால், உபியின் முன்னாள் முதல்வர்களான என்.டி.திவாரி, கல்யாண்சிங் மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் தமது பங்களாக்களை காலி செய்வதில் இறங்கியுள்ளனர்.
ஆனால், பகுஜன் சமாஜ் தலைவியான மாயாவதி இந்த விவகாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரது கட்சியின் பொதுச்செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் உபி சட்டப்பேரவை கட்சி தலைவரான லால்ஜி வர்மா ஆகியோரால் அந்த கடிதம் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் மாயாவதி, ’எங்கள் கட்சியின் ஆட்சியில் ஜனவரி 13, 2011-ல் நடந்த அமைச்சரவை கூட்ட முடிவின்படி லக்னோவின் 13 ஏ மால் அவென்யூவின் அரசு பங்களா, கன்ஷிராம் நினைவகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன் இரு அறைகளில் கட்சியின் அனுமதியுடன் முதல் அமைச்சராக இருந்த நான் தங்கினேன். இப்போது நீதிமன்ற உத்தரவின்படி அதை காலி செய்ததால் அந்த இருஅறைகளும் இனி நினைவகத்திற்கே சேர வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உபி அரசின் நோட்டீஸ் பெற்ற பின் மாயாவதி அந்த பங்களாவில் கன்ஷிராம் நினைவகம் என புதிய பெயர் பலகையை கடந்த வாரம் திடீர் எனத் தொங்க விட்டிருந்தார். இதை மறுக்கும் வகையில் உபி அரசு சார்பில் அந்த பங்களா, மாயாவதி முதல்வராக இருந்தமையால் அவருக்காக ஒதுக்கப்பட்டதாக உத்தரவு நகலை வெளியிட்டுள்ளது.
மாயாவதியில் செயல் குறித்து அதிர்ச்சி அடைந்த மனுதாரரான எஸ்.என்.சுக்லா, குறிப்பிட்ட தேதிக்குள் அனைவரையும் காலி செய்ய வேண்டும் என வலியுறுத்து உபி அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதை செய்யாதவர் மீது உச்ச நீதிமன்ற உத்தரவு மீறல் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் சுக்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்..
இதனிடையில், சமாஜ்வாதி நிறுவனரான முலாயம்சிங் யாதவும் தனக்கு மாற்று பங்களா இன்னும் கிடைக்கவில்லை எனவும், அதுவரை தாம் சந்தை மதிப்பிலான வாடகையை மாதந்தோறும் அரசுக்கு அளிப்பதாக அனுமதி கேட்டிருக்கிறார். இவரது மகனும் கட்சித் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் ஏற்கனவே, இருவருடம் உபி முதல்வர் யோகியிடம் காலஅவகாசம் கேட்டிருக்கிறார்.



Comments
Post a Comment