ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்லவிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆளைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்க முடிவு செய்தனர். இதை கட்டுப்படுத்த அரசு 144 தடை உத்தரவு போட்டது.
அன்று தடையை மீறி பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்தனர்.
தமிழக அரசு கடுமையாக விமர்சனத்துக்குள்ளான இந்தச் சம்பவத்தில் ஐந்து நாட்களாக ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் நாளை சட்டப்பேரவை கூடுவதை ஒட்டி அதில் எதிர்க்கட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்ற தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக அரசின் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தூத்துக்குடி சென்றார்.
அங்கு அவரை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பினார். இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.
தமிழகத்தில் எடுத்ததெற்கெல்லாம் ஆய்வு நடத்துகிறார், தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருக்கும் போது தன்னிச்சையாக ஆய்வு நடத்துகிறார் என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைக் கண்டுகொள்ளாமல் ஆய்வு நடத்திய ஆளுநர் தூத்துக்குடி சம்பவத்துக்கு மட்டும் ஏன் செல்லவில்லை, கழிவறையை ஆய்வு செய்யும் கவர்னருக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆய்வு செய்ய நேரமில்லையா என நெட்டிசன்கள் வாட்ஸ் அப் வலைதளங்களில் கடுமையான விமர்சனம் வைத்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, துப்பாக்கிச் சூட்டில் , போலீஸ் தடியடியில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களைச் சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Comments
Post a Comment